Friday, February 27, 2009

ஏதோ சொல்லணும் போல இருக்கு..

எனது முதல் பதிவை துவங்குவதற்கு முன் என்ன எழுதுவது என யோசித்துக்கொண்டே கழித்த முன்னிரவை நினைத்து பார்க்கையில் தோன்றும் எண்ண அலைகளை எழுதினாலே தீராத பக்கங்கள் தேவைப்படும் என்பதை நினைத்து பார்க்கும்போது எழுத தேவைப்படும் விஷயங்களும் நிறையவே உள்ளன என்பது கண்கூடு. எழுதப்படும் எந்த விடயமாக இருந்தாலும் அதற்க்கு பல்வேறு வண்ணங்கள் பூச காத்திருக்கும் இந்த தமிழ் சமுதாயத்தில், நானும் தைரியமாய் எழுத வந்துவிட்டேன் என நினைக்கும்போது தோன்றும் பரவசத்திற்க்க்காகவே நிச்சயம் நாமும் எழுத வேண்டும் என தோன்றுவதை மறுக்க முடியவில்லை.

சில விடயங்களை எழுதும்போது மட்டும் ஏதோ ஒரு மன பாரத்தை இறக்கி வைத்ததை போல் தோன்றும். நானும் அது போல ஒரு விடயத்தை பற்றியே எழுத வேண்டும் என கூறும் எனது உள்ளுணர்வுக்கு கட்டுப்பட்டவனாய் ஆரம்பிக்கிறேன்.

அந்த ஒரு அழகிய கோடைக்கால பிந்தைய மாலைப்பொழுதின் சற்றே குறைந்த அமைதியிலும், ஆங்கங்கே இருக்கும் பயணிகளின் பதட்டமான மனநிலையிலும் நிரம்பியிருக்கும் ஒரு ரயில் நிலைய நடைமேடையில் எனக்காகவே காத்திருக்கும் ஒரு தேவதையின் அறிமுகத்திற்கு நிச்சயம் ஒரு ரயில் பாட்டு தேவைப்பட்டிருக்கும் இதுவே திரைப்படமாக இருந்திருந்தால்.
அவனது பெயர் வேலன் என்கிற வேலா
அவள் பெயர் கவிதா என்கிற கவி.

ஒலிவழி மட்டுமே அறிமுகமான அவளின் நிஜத்தை காணப்போகும் என்னுடைய பதட்டமும், அங்கே உள்ள மற்ற பயணிகளின் ரயிலின் வருகை பற்றிய பதட்டத்தையே ஒத்திருந்தது. ஆறாவது நடைமேடையில் காத்திருப்பதாய் சொன்ன அவளை பார்க்கும் அவசரத்தில் வாங்க மறந்த நடைமேடை சீட்டை நினைவூட்டிய பயணிக்கு நன்றி சொல்லியபடி நகர்ந்த நான் நிச்சயம் என்னையே அக்கணம் மறந்திருந்தேன் என்று சொன்னால் மிகையில்லை. சீட்டு வாங்க சென்ற அவ்விடத்தில் மூன்று ரூபாய்க்கு ஐம்பது ருபாய் கொடுத்து மீதி சில்லறை வாங்காமல் சென்ற என்னை எல்லோரும் ஏளனமாய் பார்த்திருக்க கூடும்.

பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு தேவ கணத்தில் பார்த்த அவளது முகம் எனது மனத்திரையில் எவ்வளவு முயன்றும் கொண்டு வர முடியாமல் தோற்றுப்போயிருந்த எனது மனது திரும்ப திரும்ப சொன்னது "என்ன அவசரம், இன்னும் சில வினாடிகளில் பார்க்க போகிறாய்".

அப்பாடா.. ஆறாவது நடை மேடை வந்தாயிற்று.. அந்த ரயில் நிலைய படிகளில் இறங்கிய என்னை தனது அம்மாவிடம் அழைத்து செல்ல காத்துக்கொண்டிருந்தஅவளது முகம் தனது எல்லா உணர்ச்சிகளையும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. கண்கள் விரிய, புன்முறுவல் பூக்க மிக ஆச்சர்யத்துடன் இருவரும்...

ஹேய், என்னடா ரொம்ப குண்டாயிட்ட.. எனது வயிற்றில் ஒரு செல்ல இடி இடித்தபடி கேட்ட அவளுக்கு நான் பதில் சொல்ல எனக்கு உண்மையிலேயே சில வினாடிகள் தேவைப்பட்டது. உன் முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குடா, உனக்குதான் என் முகம் ஞாபகமே இல்லன்னு சொல்லிட்ட. சரி வா அம்மா காத்துக்கிட்டிருக்காங்க. ஏன் வர இவ்ளோ நேரம், நாங்க அரை மணி நேரம் முன்னவே வந்துட்டோம்.. டிரைவர் அங்கிள் எங்கள ட்ராப் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. ரயில் வர இன்னும் நிறைய நேரம் இருக்குன்னு நினைக்கிறேன்.. நீ எவ்ளோ நேரம் எங்க கூட இருப்ப... இந்த டி ஷர்ட் சூப்பரா இருக்குடா...
இப்படியாக கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருந்த அவளது குழந்தைதனத்தை நான் அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்ததை நிச்சயம் அவள் அறிய வாய்ப்பில்லை.

அம்மா நான் வர்றத பத்தி என்ன சொன்னாங்க? எதுவும் சொல்லலடா..
உங்க அம்மா முகம் எனக்கு ஞாபகம் இருக்கு, உன் முகத்தைதான் மறந்துட்டேன்..
இனிமேல் மறந்தினா உன்ன கொன்னுடுவேன் தெரிஞ்சிக்கோ... சரி...
ஹெலோ ஆண்ட்டி, எப்பிடி இருக்கீங்க... நல்லா இருக்கேன், வாப்பா, கவி சொன்னா வேலன் நம்ம பார்க்க வர்றான்னு...வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா...
இருக்காங்க ஆண்ட்டி...நீ கடைசியா வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்..ஆமா ஆண்டி.. அப்போ நான் புனே ல இருந்தேன். இப்போ நான் பெங்களூர் வந்துட்டேன். கவிய அப்பதான் கடைசியா பார்த்தேன். அதோட இப்பதான் பாக்குறேன்.
ஹேய், நீ என்ன பாக்க வந்தியா... இல்ல எங்க அம்மாவ பாக்க வந்தியா...அவங்க கூடவே பேசிக்கிட்டிருக்க... உன்ன நான்தான் வர சொன்னேன், அவங்க சொல்லல...படபடவென பொரிந்தாள் கவி.
இவ எப்பவுமே இப்படிதான். யாருக்கும் மரியாதை கொடுத்து பேசவே மாட்டா..நீ தப்ப நினைசிக்காதப்பா.. கவி இதை விட கேவலமாக என்னை தொலை பேசியில் திட்டியிருக்கிறாள் என்று அவங்களுக்கு தெரியாது.
சரி சரி... சொல்லு... பரீட்சையெல்லாம் எப்படி பண்ணின..
ம்ம்.. உன் மொபைல கொடு... அதுல யார் போடோவேல்லாம் வச்சிருக்கன்னு பாக்கணும்.. யார் போடோவும் இல்ல.. இனிமேல் உன் போட்டோவதான் வெச்சிக்கணும்...
எனது அலைபேசியை வாங்கி அவள் டைப் செய்த முதல் மெசேஜ் "கவி வெட்ஸ் வேலா"
பைத்தியக்கரதனமா எதுவும் பண்ணாத.. அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க...எப்பிடி பயப்படுறான் பாரு.. ஒரு கேலிப்புன்னகையுடன் அவள் பார்த்த ஒரு பார்வையை நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது.
இப்படியாக கழிந்த எங்களது விவரிக்க இயலாத விழி பேச்சுகளையும், அளவாக தேர்ந்தெடுத்து பேசிய வாய்ப்பேச்சுகளையும் காணவோ என்னவோ திடீரென்று கிளம்பிய மழை மேகங்களும், மிதமான வேகத்தில் வீசிய மழைக்காற்றும் அந்த சூழ்நிலையை மேலும் ரம்மியமாக்க.. நான் ஏதோ ஒரு மாயலோகத்தில் லயித்திருந்தபோது...
வேலா நீ வேணும்னா கிளம்புப்பா... மழை வரும்போல இருக்கு.. நீ ரொம்ப தூரம் போகணும் இல்ல.. நாங்க ரயில் வந்தா கிளம்பி போறோம்.. இது கவியின் அம்மா..கவி என்னை முறைப்பது போல் பார்த்தாள்..
இல்ல ஆன்ட்டி ரயில் வந்த பிறகே நான் கிளம்பறேன்... தனியாக இருக்கீங்களே.. அதுவும் இந்த நடைமேடையில் துணைக்கு கூட யாருமே இல்ல...
பரவாயில்லப்பா... நானும் கவியும் எல்லா இடத்திற்கும் தனியாகவே போவோம்.. தனியாகவே வருவோம்.. சரி ஆன்ட்டி.. யாருமே இல்லன்னா பரவாயில்ல... இப்பதான் நான் இருக்கேன் இல்ல..
இந்த வார்த்தை ஒரு சிறிய அளவிலான அதிர்வை இருவருக்கும் ஏற்படுத்தியிருக்க கூடும். அது அவர்களின் முகபாவங்களிலிருந்து என்னால் உணரமுடிந்தது..
வழக்கம்போல் கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெஸ் அரை மணி நேரம் தாமதமாக வந்து எனக்கு சந்தோசத்தையும் மற்ற பயணிகளுக்கு எரிச்சலையும் கொடுத்தது. கவியின் அம்மா லக்கேஜை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல.. நானும் கவியும் ஒரு ஒரு பை மற்றும் சூட்கேசுடன் பின்னே நடந்து சென்றோம் அந்த ஏசி கம்பார்ட்ட்மேன்டை நோக்கி.
அவள் என்னை இடிப்பதும் நான் அவளை உரசுவதுமான மெல்லிய ச்ச்பரிசங்களுடன்.. முதல் நாளே உன் லக்கேஜ் தூக்க வெச்சிட்டியே.. இது நான்..
நீ வெச்சிருக்கும் பையில என்னோட சுடிதார் மட்டுதான் இருக்கு.. அதனால தப்பில்ல கொஞ்ச நேரம் தூக்கிட்டு வா... கவி பத்திரமாய் ஏறு.. கவி அம்மா பதட்டத்துடன் ரயிலுக்குள் செல்ல.. அரை மனதுடன் கவி பின்தொடர.. நான் எனது இதயத்தை பத்திரமாக கவியிடம் தொலைத்துவிட்டு நடைமேடையில் நின்றுகொண்டிருக்க.. கூவென கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் எங்களது காதலை இந்த உலகத்துக்கு உரைத்துக்கொண்டு நகர..மழை மேகம் சிறு தூறலாய் என் மேல் பட்டு சிதறிக்கொண்டிருந்தது..
சீ.. இந்த ஏசி பெட்டியில் ஏன் முழுவதும் கண்ணாடியால் மூடிவைத்திருக்கிறது,இதே ஜன்னலாக இருந்திருந்தால் நிச்சயம் நான் அவளை மேலும் சில வினாடிகள் ரசித்திருக்க முடியும்.. எப்படியோ... நிறைந்த மனதுடன் நான் ரயில் நிலையத்தை விட்டு சென்றுகொண்டிருக்க கவி முழுவதுமாய் என்னை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டிருந்தாள்.

(தொடரும்)

Thursday, February 12, 2009

அன்புள்ள வலையுலக பதிவர்களுக்கு வணக்கம்.